ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவது எப்படி என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருப்பதால், கிட்டதட்ட 60 சதவீதம் பேர்வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அப்போது தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை உதாரணமாக சொல்லி, மன அழுத்தத்திலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.
“கிரிக்கெட் விளையாட உடல் பலம் பட்டும் போதாது, மன பலமும் மிக முக்கியம் என்பதை இளம் வயதில் கற்றுக்கொண்டேன். பேட்டி தூங்குவதற்கு முன்பு, களத்திற்குள் வரும்போது பதற்றம் அதிகமாக இருக்கும். கிட்டதட்ட 12 வருடங்களாக இந்த பதற்றம் என்னுள் இருந்தது. போட்டியை நினைத்துப் பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். அதன்பிறகுதான் இதுகுறித்து சிந்திக்கத் துவங்கினேன். எதற்காகப் பதற்றமடைய வேண்டும்? என நான் என்னிடமே கேட்கத் துவங்கினேன். அதன்பிறகு, அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய சச்சின், “பதற்றம், பயம்தான் நமக்கு எதிரி. அதை வெல்ல வேண்டும் என்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கொரோனா காலத்தில் நாம் தனிமையில் இருப்பதால் தேவையற்ற பயம், பதற்றம், மன அழுத்தம் ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து அதை நினைத்துப் பயப்படாமல், எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப் பக்குவத்திற்கு நாம் வர வேண்டும். அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாரானால்போதும் மன அழுத்தத்திலிருந்து சுலபமாக விடுபட்டுவிடலாம்” எனக் கூறினார்.
“நான் பதற்றமடையும்போது அதைப்பற்றித் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருக்காமல் வேறு சில செயல்களில் ஈடுபடத் துவங்கிவிடுவேன். துணிகளை மடித்து வைப்பது, போட்டிக்குத் தேவையான பொருட்களை ரெடி பண்ணுவது போன்ற செயல்களை செய்வேன். இதுதான் சிறந்த வழி என நான் கருதினேன். ஒரு விஷயத்தை நினைக்கும்போது பதற்றம், மனஅழுத்தம் ஏற்பட்டால், நமக்குப் பிடித்த விஷயத்தை செய்யத் துவங்கிவிட வேண்டும். இதனால், பதற்றம் குறையத் துவங்கிவிடும்” என்றார்.
சச்சின் டெண்டுல்கர் கடைசியாக, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசியவர் என்ற மெகா சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.