உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் ஜாய் பிஷாராவையும் லிடியா போகுவையும் மட்டும் ஆச்சரியத்துடன் பார்ப்பதற்குக் காரணம் இருக்கிறது. இவர்கள் 2014-ம் ஆண்டு போகோ ஹரம் தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்பட்ட 300 மாணவியரில் இருவர்.
நைஜீரியாவின் சிபோக் பகுதியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் பிஷாராவும் லிடியாவும் படித்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் உறவினர்கள். 2014-ம் ஆண்டு ஏப்ரல் 14 நள்ளிரவு. எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. மாணவியர் பயத்துடன் வெளியே வந்தனர். டிரக்குகளும் கார்களும் நின்றுகொண்டிருந்தன. தீவிரவாதிகளால் வளைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அந்தச் சிறுமிகள் புரிந்துகொண்டனர்.
துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவர், “இந்தக் கட்டிடத்தைத் தீ வைக்கப் போகிறோம். நீங்கள் இறக்க விரும்பினால் இடது பக்கம் செல்லுங்கள். உயிருடன் இருக்க விரும்பினால் வலது பக்கம் செல்லுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.
மாணவியர் அரண்டு போனார்கள். ஒருவரும் இடது பக்கம் செல்லவில்லை. அவர்கள் சொன்னதுபோல் வலது பக்கத்திலுள்ள டிரக்குகளில் ஏறினர். இரவில் யாருக்கும் தெரியாமல் வண்டிகள் வேகமெடுத்தன.
போகோ ஹரம் குறித்து ஏற்கெனவே மாணவியரில் பலரும் கேள்விப்பட்டிருந்தனர். பெண்கள் படிப்பதை அவர்கள் விரும்புவதில்லை. தங்களைக் கடத்தி என்ன செய்யப் போகிறார்களோ என்று அஞ்சினர். அவர்களிடம் சென்று வதைபடுவதைவிட, டிரக்கிலிருந்து குதித்து உயிர் போவது சிறந்தது என்று நினைத்தனர். டிரக் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக குதித்து, தரையில் உருண்டனர். இப்படி குதித்த 57 மாணவியரில் பிஷாராவும் லிடியாவும் இருந்தனர்.
”உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்து நான் குதிக்கவில்லை. ஆனால், உயிருடன் இருப்பதை உணர்ந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இரவு முழுவதும் நடந்து, பாதுகாப்பான இடத்துக்கு வந்து சேர்ந்தோம். ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அமெரிக்காவில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் சொன்னதை மீறி நாங்கள் படித்ததால், எங்களைத் தேடி வந்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டே இருந்தோம். முதுகலை படித்த பிறகு, எங்கள் நாட்டுக்குச் சென்று, தொண்டு நிறுவனம் ஆரம்பித்து, மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடப் போகிறோம்” என்கிறார் லிடியா.
”இந்த இடத்தை அடைவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறோம். நினைக்கும்போதெல்லாம் அழுகை வந்துவிடும். நாங்கள் அமெரிக்காவுக்கு வந்தபோது, இங்குள்ள மக்கள் அதிகமான சுதந்திரத்துடன் இருப்பதைக் கண்டு வியந்துபோனேன். மக்கள் குரல் கொடுத்தால், அரசாங்கம் காது கொடுத்துக் கேட்கிறது. ஆனால், எங்கள் மக்களுக்குக் குரலே இல்லை. அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்” என்கிறார் பிஷாரா.
300 சிறுமியரில் 57 பேர் தப்பிவிட்டனர். இன்னும் கொஞ்சம் பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதி மாணவியர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.