கொரோனாவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் வயது முதியோர் அதிக ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தடுப்பூசி போடுவது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் முதியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
குழந்தைகள், இளைஞர்களுக்கு கொரோனாவால் ஆபத்து இல்லை என்பதே பொது மனநிலையாக இருக்கிறது. எனினும், பிரேசிலில் அண்மைக்காலமாக கொரோனாவால் குழந்தைகள் இறப்பது அதிகரித்துள்ளது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் பச்சிளங்குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரேசில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கொரோனா பரவத் தொடங்கியது முதல் இதுவரை 832 குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் அனைவருமே 5 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.