இந்திய அணி வீரர் நடராஜன் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது மூன்றுவகை கிரிக்கெட்டிலும் அறிமுகமான இந்திய வீரர் நடராஜன், அப்போது நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிரடியாகப் பந்துவீசி இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.
அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அடுத்து டி20 தொடரில் இவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக அத்தொடரின் கடைசி போட்டியில் மட்டும் நடராஜன் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடராஜன் களமிறங்கி சிறப்பாகப் பந்துவீசினார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற நடராஜன், முதல் ஐந்து போட்டிகள் மட்டுமே பங்கேற்றார். அதன்பிறகு, முழங்கால் வலி பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்தவர்க்காகத் தொடரிலிருந்து விலகி மருத்துவமனைக்குச் சென்றார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதன்பிறகு ட்வீட் வெளியிட்ட நடராஜன், “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்திய பிசிசிஐக்கு நன்றி” எனப் பதிவிட்டிருந்தார்.
அதன்பிறகு இவர் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடராஜன், “நான் ஒவ்வொரு நாளும் முன்பைவிட வலுப்பெற்று வருகிறேன்” எனத் தெரிவித்து, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது. அதற்கு நடராஜன் தேர்வாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.