இந்திய வகை உருமாறிய கொரோனா மிக வேகமாக பரவுவது தெரியவந்தால் ஊரடங்குக்கு முடிவே இல்லை என பிரிட்டன் பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த உருமாறிய வைரஸ் இதுவரை 44 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இந்நிலையில், இந்திய உருமாறிய கொரோனாவால் ஊரடங்கு முடிவுக்கு வராமல் போகலாம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் பல வாரங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது.
நீண்ட கட்டுப்பாடுகளுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. இந்த சூழலில், இந்திய உருமாறிய கொரோனா பெரும் இடையூறாக இருக்கலாம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், “இந்திய வகை உருமாறிய கொரோனா பற்றி பல விஷயங்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்பது தெரிகிறது. எனினும், எந்த வேகத்தில் பரவுகிறது என தெரியவில்லை.இந்த வைரஸ் குறுகிய அளவுக்கு வேகமாக பரவினால் ஊரடங்கை தளர்த்தும் திட்டங்களில் மாற்றம் இருக்காது. ஆனால், இதே வைரஸ் மிக வேகமாக பரவுவதாக தெரியவந்தால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.