இந்த ஆண்டில் கொரோனா நெருக்கடி மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இரண்டாவது ஆண்டாக கொரோனா வைரஸுடன் உலகமே போராடி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தற்போது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் கொரோனா மிக அபாயகரமாக இருக்குமென உலக சுகாதார அமைப்பை சேர்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், “கொரோனா கொள்ளை நோயின் முதல் ஆண்டைக் காட்டிலும் இரண்டாம் ஆண்டு மிகக் கொடியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 10 வாரங்கள் இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா நெருக்கடி மிக மோசமாகியுள்ளது. ஜப்பானில் கூடுதலாக மூன்று பிராந்தியங்களில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை இப்படியிருக்க ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும்படி கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. ஏற்கெனவே டோக்யோவில் எமர்ஜென்சி அமலில் இருந்த நிலையில் தற்போது ஹிரோஷிமா, ஒகாயமா, ஹொக்கைடோ ஆகிய பகுதிகளிலும் எமர்ஜென்சி அமலுக்கு வந்துள்ளது.