24.4 C
Jaffna
January 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் புதிய நினைவுக்கல்: தயாரிப்பு முதல் காணாமல் போனது வரை!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று முன்தினம் (12)  இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னர், இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் அந்த பகுதி கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த காட்டுமிராண்டித்தனம் இடம்பெற்றது.

இராணுவத்தினரே இந்த பாதக செயலை செய்தார்கள் என ஏற்பாட்டு குழு குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மாலையில், ஏற்பாட்டு குழு சார்பில் பாதிரியார்கள் சிலர் புதிய நினைவுக்கல்லை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்திற்கு கொண்டு சென்றனர்.

ஏற்கனவே நினைவுத்தூபி அமைந்திருந்த இடத்தில், அதைற்கு பதிலாக புதிய நினைவுக்கல்லை வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. புதிய நினைவுக்கல் 2,000 கிலோகிராம் நிறையுடைய பிரமாண்ட கற்பாறையில் செதுக்கப்பட்டிருந்தது.

அந்த கல்லில்,

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் முற்றம்
முள்ளிவாய்க்கால்

தமிழ் இனப்படுகொலை ஒரு தசாப்த்தத்தின் கோரிக்கைகள்
• முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த;
• தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் கோர;
• தமிழர் இன அடையாள இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க;
• தமிழர் சமூக அமைப்புக்களைப் பலப்படுத்தி தமிழின விடுதலைக்காக உழைக்க.

என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டு குழுவினர் வாகனமொன்றில் புதிய நினைவுக்கல்லை பாரந்தூக்கி வசதியுள்ள வாகனத்தில் நேற்று எடுத்து சென்றனர். 2,000 கிலோ எடையுள்ள நினைவுக்கல்லை பாரந்தூக்கியின் உதவியுடன், நிறுவலாம் என நினைத்திருந்தனர். இதற்காக கருங்கல், சீமெந்து உள்ளிட்ட பொருட்களும் எடுத்து செல்லப்பட்டிருந்தன. எனினும், பாரந்தூக்கியுடனான கனரக வாகனம் மணல் பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

பின்னர் ஜேசிபி வாகனமொன்றை ஏற்பாடு செய்து, அங்கு சென்று புதிய கல்லை நிறுவுவதற்குள் இராணுவம், பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர்.

நினைவுத்தூபியில் தமது அனுமதியின்றி புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாதென பொலிசார் தெரிவித்தனர். எனினும், அதற்கான அனுமதியை வழங்க வேண்டிய தரப்பு கரைத்துறைப்பற்று பிரதேசசபை. கரைத்துறைப்பற்று பிரதேசசபையிடம் ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தனர்.

இராணுவம், பொலிசாரின் அழுத்தத்தையடுத்து நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து மதகுருக்கள் வெளியேறி விட்டனர்.

அதன் பின்னர் அந்த பகுதி இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டது. செய்தியாளர்களும் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை.

நள்ளிரவு கடந்த பின்னரும் அந்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

விடிகாலையில் அந்த பகுதிககு ஏற்பாட்டாளர்கள் சென்ற போது, காட்டுமிராண்டித்தனம் அரங்கேறியிருந்ததை கவனித்தனர். பழைய நினைவுக்கல் அடித்துடைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக கொண்டு சென்ற நினைவுக்கல் களவாடப்பட்டிருந்தது. இந்த காட்டுமிராண்டித்தனத்தை யார் செய்திருப்பார்கள் என தனியாக புதிதாக சொல்ல வேண்டியதில்லை.

புதிதாக கொண்டு செல்லப்பட்ட கல் 2,000 கிலோ நிறையுடையது. அதனால் தூக்கிச் சென்றிருக்க வாய்ப்பில்லை. வாகனத்திலேயே கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். எனினும், அந்த பகுதியில் வாகனங்கள் வந்த தடயம் தென்பட்டிருக்கவில்லை.

அந்த பகுதியில் புதிதாக நிலம் தோண்டப்பட்ட தடயம் தென்படுகிறது. அதனால், புதிய நினைவுக்கல்லை வெளியே கொண்டு செல்லாமல், அடித்து உடைத்த பின்னர் நிலத்தில் புதைத்திருக்கவே வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

பொலிஸ் முறைப்பாடு திரும்பப் பெறப்பட்டது

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதிவ செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்கள், மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் க.சுகாஷ், ந.காண்டீபன், கரைத்துறைப்பற்று தவிசாளர் க.விஜிந்தன் உள்ளிட்டவர்கள் சென்று, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை பொலிசார் தொடங்கினர். விசாரணைக்காக, முள்ளிவாய்க்கால் தூபி இருந்த பகுதி பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலைமை வரும் என்பதுடன், உடைக்கப்பட்ட தூபியின் பாகங்கள் பொலிசாரால் பொறுப்பேற்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, வழங்கப்பட்ட முறைப்பாட்டை திரும்பப் பெற்று விட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

Leave a Comment