வயிறு உப்புசம், வயிற்று கோளாறு, வயிறு வலி போன்ற வயிற்று பிரச்சனைகளை உணர்ந்தால் முருங்கைக்கீரையை கொண்டு அதை சரி செய்து விட முடியும். எப்படி எடுப்பது என்று பார்க்கலாம்.
வயிறு உப்புசம் வரும் போது பல அவஸ்தைகள் உணர்வது உண்டு. வயிறு வலி இருக்கும் போது அதை சரி செய்ய பாரம்பரியமான பாட்டி வைத்தியம் உதவும். பாட்டி வைத்தியத்தில் எப்போதுமே வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே சரி செய்து விட முடியும். அப்படி வயிற்று கோளாறுகளுக்கு உதவக்கூடியது தான் முருங்கை இலை.
முருங்கை முன்னூறுக்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்க கூடியது. முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை காம்பு, முருங்கை மர பட்டை என எல்லாமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. இந்த முருங்கை இலையை கொண்டு வயிற்று கோளாறை தடுக்க எப்படி எடுக்கலாம் என்று பார்க்கலாம்.
வயிறு வலி
வயிறு வலி இதனால் தான் வருகிறது என்று தனித்து சொல்ல முடியாது. உணவு கோளாறு, செரிமான பிரச்சனை, அல்சர், குடல் பிரச்சனை போன்றவற்றால் ஏற்பட்டாலும் பெரும்பாலும் உணவு கோளாறால் தான் இவை உண்டாகிறது.
வயிறு வலி இருக்கும் போது செரிமானப்பிரச்சனையும் உண்டாகும். சிலருக்கு மலச்சிக்கல் சேர்ந்து வரலாம். குழந்தைகள் அதிகமாக இனிப்பு சாப்பிடும் போது குடல் பூச்சிகள் வயிற்று வலியை உண்டாக்க செய்யும்.
அதிலும் கோடையில் உஷ்ணம் காரணமாக உண்டாகும் வயிறு வலி அதிக உபாதையையும் வலியையும் தரக்கூடியது. இந்த வயிறு வலி இருக்கும் போது முருங்கை கொண்டு எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.
முருங்கையும் உப்பும்
தேவை
முருங்கை இலை – இரண்டு கைப்பிடி
உப்பு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
முருங்கை இலையை மட்டும் தனியாக எடுக்கவும். காம்புகள் முற்றிலும் நீக்கி இலையை மட்டும் எடுத்து வைக்கவும். உப்பு சீரகம் முருங்கை இலை மூன்றையும் உரலில் இட்டு இடிக்கவும். இதை கைகளில் எடுத்து சாறை தனியாக எடுக்கவும். சாறு வரும் வரை இடிக்கவும்.
உப்பு சேர்த்து இடிப்பதால் முருங்கை இலையின் சாறு வரும். கால் டீஸ்பூன் முதல் ஒரு டீஸ்பூன் வரை சாறை பெறலாம். தேவையெனில் சிறிது நீர் தெளிக்கவும். இந்த சாறை பிழிந்து அப்படியே வாயில் ஊற்றிகொள்ளவும்.
இந்த சாறை குடிப்பதற்கு அரை மணி நேரம் முன்பும், அரை மணி நேரத்துக்கு பிறகும் எதுவும் சாப்பிட வேண்டாம். திரவ ஆகாரங்களும் குடிக்க வேண்டாம். தேவையெனில் வெதுவெதுப்பான நீர் கால் டம்ளர் அளவு குடிக்கலாம்.
வயிறு வலி அதிகமாக இருப்பவர்கள் இந்த சாறை வயிற்றில் தடவி கொள்ளலாம். இதை தடவிய சில மணி நேரங்களில் வயிறு வலி குறைவதை உணர்வீர்கள். குழந்தைகளுக்கும் செய்யலாம். தொடர்ந்து இரண்டு நாட்கள் இதை செய்தால் போதும்.
முருங்கை நன்மைகள்
முருங்கை கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது. இதை உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடலில் சூடு தணியும். முருங்கைக்கீரை சாறை குடித்து வந்தால் உடல் சூட்டால் வரும் உஷ்ணம் தணியும். முருங்கை மூட்டு வலி வராமல் தவிர்க்க முடியும். இது வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்ற உதவும்.
வயிற்று புண் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்த முருங்கைக்கீரை சாற்றை எடுத்துகொள்ளலாம். வயிறு உப்புசம் வாய்வு கோளாறு பிரச்சனைகள் இருந்தால் இந்த கீரையின் சாறு அவர்களுக்கு பெரிதும் உதவக்கூடும். முருங்கைக்கீரை சத்து மிக்கது கூட.
தாவர உணவிலும் இல்லாத அமினோ அமிலங்கள் இதில் உள்ளது. முருங்கைக்கீரையில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது. முருங்கைஇலையை பொடியாக்கி தேனில் குழைத்தும் கொடுக்கலாம். பல வியாதிகளுக்கு சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படும் முருங்கை வயிறு வலிக்கு மிகச்சிறந்த வைத்தியம் என்று சொல்லலாம்.