கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட நபர்களால் கிராம சேவையாளர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தாக்குதல்தாரிக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12) பகல் இடம்பெற்றுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம்கிழக்கு நெத்தலியாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் காணப்படும் ஒதுக்கீட்டு காணியல் ஒருவர் கனரக வாகனம் கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் அனுமதியற்ற மணல் அகழ்வினையும் மேற்கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான பெண் கிராம அலுவலர் கள விஜயம் மேற்கொண்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாட்டை தடுக்க முற்பட்டுள்ளார்.
இதனை அடுத்த குறித்த சட்டவிாத செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் கனரக வாகனத்தினால் கிராமசேவையாளரை மோதும் வகையிலான அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த சம்பவ இடத்தில் தர்மபுரம் பொலிஸ் நிலைய உத்தியுாகத்தர் ஒருவரும் நின்றதாகவு்ம, கிராம சேவையாளரை பாதுகாப்பதற்கு மாறாக சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஒருவரை பாதுகாக்க முற்பட்டதாகவும் கிராம சேவையாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரனின் கவனத்திற்கு கிராம சேவையாளர் கொண்டு சென்றதை அடுத்து பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு சென்று கள நிலைமைகளை பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டார்.
இதனை அடுத்த தர்மபுரம் பகுதிக்க பொறுப்பாக இருந்த 572 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்ததுடன், சம்பவம் தொடர்பில் கள விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதி அரச ஒதுக்கீட்டு பகுதி எனவும், அதில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிராம சேவையாளரான பெண் உத்தியோகத்தரை அச்சுறுத்தம் வகையில் நடந்து கொண்ட நபரை சட்டத்துக்கு முன் நிறுத்தி சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வருகை தந்திருந்த 572 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குறித்த இடத்தை அருகில் உள்ள இராணுவ காவலரண் ஊடாக கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதாகவும், சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கண்டாவளை பிரதேச செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.
கிராம சேவையாளரை தாக்க முற்பட்ட சம்பவமானது சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு எடுக்கும் நவடிக்கைகளிற்கான அச்சுறுத்தலாகவே பார்ப்பதாகவும், குறித்த செயற்பாட்டுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படாதுவிடின் பாரிய பின்னடைவுகள் ஏற்படும் சூழல் காணப்படுவதாகவும் கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.