கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு சலுகைகளை வழங்குவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்க பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அமெரிக்காவில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி, தடுப்பூசி மையங்களுக்கு செல்வோருக்கு உபர், லிஃப்ட் வாகனங்களில் இலவசமாக அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மே 24ஆம் தேதி முதல் தடுப்பூசி மையங்களுக்கு உபர், லிஃப்ட் நிறுவன வாகனங்களில் இலவசமாக பயணிக்கலாம். ஜூலை 4ஆம் தேதி வரை இச்சலுகை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது காஃபி கப்களில் தடுப்பூசி விவரங்களை பதித்து மக்களை ஊக்குவிக்க வெள்ளை மாளிகையுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இதுவரை குறைந்தது 15.3 கோடி பேராவது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.