இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில், இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.
கடந்த ஜன.,16ம் தேதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கொரோனா அதிகம் தாக்கி வரும் நிலையில், இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதியளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முதற்கட்டமாக, தன்னார்வலர்களின் 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழுவால் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.