ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. மேலும் மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இறப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், ”ஜப்பானில் கொரோனா நான்காம் அலை காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது. டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக தீவிரத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சமீப நாட்களாக கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் கொரோனா தொற்று காரணமாக பல பகுதிகளில் அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தங்கள் நாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜப்பானில் 4,093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பானில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட, 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.