மாலைதீவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 4,978ல் இருந்து 11,629ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகில் வேகமாக கொரோனா பரவும் நாடுகளில் ஒன்றாக மாலைதீவும் மாறியிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையில் 36.6 சதவீதம் பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டனர். எஞ்சியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாளை (மே 13) முதல் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாலைதீவுகள் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தலைநகர் மாலேவில் மாலை 4 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
முன்னதாக இந்த உத்தரவு இரவு 9 மணி முதல் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மாலத்தீவுகளுக்கு வர வேண்டாம். மேலும் இந்த நாடுகளில் கடந்த 14 நாட்களாக தங்கியிருந்தாலும் அனுமதி அளிக்கப்படாது. இது தற்காலிக தடை மட்டுமே.
அதேசமயம் உரிய பணி செய்யும் அனுமதியுடன் வரும் சுகாதாரத்துறை வல்லுநர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் கடந்த 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று கொண்டு வர வேண்டும். மாலைதீவு வந்தவுடன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பிறகு தனிமையில் இருந்து வெளியே வர மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் என்று வர வேண்டும்.
மேலும் மசூதிகளில் குழுவாக தொழுகை நடத்த அனுமதியில்லை. பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.