இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய தொடருக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பில்லாத செயல் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்பாக இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய தொடர் இந்தியாவில் மீண்டும் நடத்தப்பட்ட முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரான அமைந்தது. அப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் என்பது கட்டுக்குள் இருந்தது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு பிசிசிஐ இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின் மைதானத்தில் அனுமதி அளித்தது.
இதையடுத்து மூன்றாவது டெஸ்டில் ஆமதாபாத் மைதானத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிக அளவில் பரவத் துவங்கி அந்த தொடரின் கடைசி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் பிசிசிஐ நடத்தியது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஜேம்ஸ் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய தொடரில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டது பொறுப்பற்ற செயல் என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் கூறுகையில், “இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்ட சில போட்டிகள் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. தொடர்ந்து அகமதாபாத் மைதானத்தில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். என்னுடைய பார்வையில் பார்க்கும் பொழுது இது பொறுப்பற்ற செயலாகவே நினைக்கிறேன். அதனால்தான் அகமதாபாத்தில் இன்று கொரோனா வைரஸ் அதிக அளவில் உள்ளது” என்றார்.
இந்தியாவில் நடத்தப்பட்ட 14வது ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி கொரோனா வைரஸ் பரவியதால் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் அனைத்துவிதாமான விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டது. அடுத்ததாக இந்தியாவில் திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் இன்னும் சில மாதத்தில் சூழ்நிலை சீராகவில்லை என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என தெரிகிறது.