12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல் அளித்தது.
உலக நாடுகளை சின்னாபின்னமாக்கிய கொரோனா தொற்று, பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடான அமெரிக்காவை சீர்குலைத்து விட்டது. இந்த நோய் தொற்றிற்கு கொத்து கொத்தாக உயிரிழந்து வந்தனர். இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அந்நாடு, அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் தடுப்பூசிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
தற்போதைய கொரோனா அலைக்கு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், குழந்தைகளின் நலன் கருதி, 12 முதல் 15 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மே 13ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.