முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் கோவிட் 19 சுகாதார விதிமுறைகளிற்கு மாறாக ஆட்கள் கூடி, மத நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தனால், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. எனினும், பொலிசார் அந்த முறைப்பாட்டை முழுமையாக பதிவு செய்யாமல், பாதியிலேயே நிறுத்திக் கொண்டு விட்டதாக கரைத்துறைப்பற்று தவிசாளர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
முல்லைத்தீவிலுள்ள குருந்தனூர் மலையில், நேற்று மாலை தொடக்கம் பெருமளவு இராணுவத்தினர், பௌத்த பிக்குகளில் பங்கேற்புடன் பிரித் ஓதும் நிகழ்வு நடந்தது. அங்கு விகாரை அமைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
தற்போதைய கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத நிகழ்வுகள், பொதுநிகழ்வுகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்து ஆலய நிர்வாகமொன்றை பொலிசார் கைது செய்துமிருந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார அதிகாரிகளிற்கு தெரியாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது தொடர்பில், கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றார்.
இது குறித்து கரைச்சி தவசாளர் தமிழ்பக்கத்திடம் தெரிவிக்கையில்,
“கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் பல ஆலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. ஆலய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். எனினும், அதை மீறி குருந்தனூரில் பெருமளவானவர்கள் ஒன்றுகூடி மத நிகழ்வு இடம்பெறுவதாக அறிகிறோம்.
கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவராக இராணுவத்தளபதியே செயற்படுகிறார். இந்த நிலையில் இராணுவத்தினரின் பிரசன்னத்தில், பாதுகாப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து எமக்கு பல சந்தேகங்கள் உள்ளன.
நாம் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, இந்த விவகாரத்தை தொல்பொருள் திணைக்களத்தில் முறைப்பாடாக மேற்கொள்ளும்படி பொலிசார் கூறினர். ஆனால், நாம் தொல்பொருள் ஆய்வை பற்றி பேசவரவில்லையென்றும், சுகாதார நடைமுறை பற்றியே பேச வந்துள்ளதாகவும் குறிப்பிட்டேன்.
முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி செய்தால் அனைவரையும் கைது செய்வதாக இராணுவத்தளபதி கூறுகிறார். ஆனால் குருந்தனூரில் ஆட்கள் கூடுகிறார்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறோம் என்றேன்.
எனது முறைப்பாடு கிட்டத்தட்ட அரைவாசி பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த முறைப்பாட்டை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேறகொள்ளுமாறு பொலிசார் தெரிவித்தனர். அத்துடன், முறைப்பாட்டை பதிவு செய்வதை இடைநிறுத்தினர்“ என்றார்.




