மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மியான்மர் கவிஞர் கெத் தி, ஒரே இரவில் ராணுவத்தின் தடுப்புக்காவலில் இறந்தார். உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அவரது உடல் திரும்பப் பெறப்பட்டது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
“அவர்கள் தலையில் சுடுகிறார்கள். ஆனால் புரட்சி இதயத்தில் இருப்பது அவர்களுக்குத் தெரியாது” என்ற வரியை எழுதிய கெத் தியின் மரணம் குறித்து கருத்து கேட்கும் அழைப்புகளுக்கு ராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கவில்லை. உயிரிழந்த கவிஞருக்கு 45 வயது என்று அவரது பேஸ்புக் பக்கம் மூலம் தெரிகிறது.
சாகிங் பிராந்தியத்தில் உள்ள மத்திய நகரமான ஸ்வெபோவில் ஆயுதமேந்திய வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கவிஞர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் சனிக்கிழமை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கெத் தியின் மனைவி கூறினார். அரசியல் தலைவர் ஆங் சான் சூகி வெளியேற்றப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மையமாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.
“நான் விசாரிக்கப்பட்டேன், அவரும் இருந்தார், அவர் விசாரணை மையத்தில் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் திரும்பி வரவில்லை, அவரது உடல் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது.” என்று அவரது மனைவி சாவ் கூறினார்.
“அவர்கள் காலையில் என்னை அழைத்து மோனிவாவில் உள்ள மருத்துவமனையில் அவரைச் சந்திக்கச் சொன்னார்கள். இது ஒரு உடைந்த கை அல்லது ஏதோவொன்று என்று நான் நினைத்தேன். ஆனால் நான் இங்கு வந்தபோது, அவர் சவக்கிடங்கில் இருந்தார் மற்றும் அவரது உள் உறுப்புகள் வெளியே எடுக்கப்பட்டிருந்தன.” என்று அவர் கூறினார்.
மியான்மரில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சங்கம், கவிஞர் ராணுவ விசாரணையின்போது டார்ச்சர் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ராணுவ ஆட்சியாளர்கள் இது வரை 780 பேரைக் கொன்று குவித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.