சர்க்கரை நோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களை கொண்டுள்ளவர்களுக்கு கொரோனா தொற்றினால் புதிய ஆபத்து இருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றிற்கு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை என அனைத்து தரப்பு வயதினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தினால் இந்தியாவே சீர்குலைந்து வரும் நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது, சர்க்கரை நோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களை கொண்டுள்ளவர்களுக்கு கொரோனா தொற்றின் போது, மியூகோமிகோஸிஸ் ஆபத்தான பூஞ்சை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தப் பூஞ்சை, மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்து விடும் என்றும், இந்த மாதிரியான பூஞ்சைகள் காற்றில் பறந்து உடல்நலம் பாதித்தவர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றி சிவந்த நிறத்தில் வலி, தலைவலி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் ரத்த வாந்தி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.