சிறியவர்களானாலும் பெரியவர்களானாலும் நாம் பழங்கால கோவிலுக்கோ அருங்காட்சியகங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள சிற்பங்களையும் பொருட்களையும் பார்க்கும்போது நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழந்துள்ளார்கள் என்பதை எப்படியாவது பார்க்க முடியுமா என்று யோசித்திருப்போம். ஆனால் டைம் டிராவல் என்ற ஒன்றை இன்னும் நாம் கண்டுபிடிக்கவில்லை என்பதால் அது இதுவரை சாத்தியமாகவில்லை. ஆனால், முந்தைய காலத்தின் கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் நம்மை கவர்ந்திழுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
ஆனால் அந்த காலத்தில் ஆடைகள் கலைப்பொருட்கள் எல்லாம் எப்படி மணம் வீசியிருக்க கூடும் என்பதை உணர ஒரு புதிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
UCL, ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமி போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆடியூரோபா (Odeuropa) என்ற திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 500 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்த நறுமணங்களை மீண்டும் உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தப் போகின்றனர்.
இந்த திட்டத்திற்காக, அந்நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய ஹாரிசன் 2020 திட்டத்திலிருந்து €2.8 மில்லியன் மானியம் பெற்றுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் பழைய நூல்களைப் பார்த்து, ஏழு மொழிகளில் உள்ள இலக்கியங்களில் முழுவதும் வாசனை மற்றும் நறுமணங்களுக்கான விளக்கங்களைத் தேடி அவற்றை நிபுணர்களுக்காகத் தொகுத்து கொடுக்கும்.
ஒருங்கிணைந்த தகவல்களைப் பயன்படுத்தி, வாசனையின் முக்கியத்துவத்தையும் வரலாற்றையும் விளக்கும் வகையில் உரையைச் சேர்த்து ஆராய்ச்சியாளர்கள் நறுமணத் தொகுப்பை உருவாக்குவார்கள். இந்த வாசனைகளைப் பற்றிய தகவல்கள் வாசனை திரவியங்கள் மற்றும் வேதியியலாளர்களுக்கு வழங்கப்படும், அதன் விளக்கத்திற்கு ஏற்ப ஒரு நறுமணம் மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படும். இந்த வாசனை திரவியங்கள் பின்னர் மக்களை முன்னோர்கள் வாழ்ந்த சகாப்தத்திற்கு கொண்டு செல்ல அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.