நெல்லியடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆலயமொன்றின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது.
கரவெட்டி, கட்டைவேலி பகுதியிலுள்ள நுணுவில் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு திருட்டு இடம்பெற்றது.
ஆலய கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த திருடர்கள் மூல விக்கிரகத்தை தூக்கி வீசிவிட்டு, ஐம்பொன் கிரீடங்கள் இரண்டையும், ஆலய பிரதம குருவின் 2 பவுண் சங்கிலியையும் திருடியுள்ளனர்.
ஆலய வளாகத்தில் பிரதமகுருவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த சங்கிலியே திருடப்பட்டுள்ளது. பிரதம குரு நேற்று முன்தினம் இரவு கொழும்பு சென்றிருந்த நிலையில் திருட்டு இடம்பெற்றது.
சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிசார விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
இதேவேளை, கரவெட்டி கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடொன்றில் நுழைந்த திருடர்கள் ஆடான்றை திருடி சென்றுள்ளனர். இதன்போது குரைத்த நாயின் கழுத்தை வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் பொலிஸில் முறையிடாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




