கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜ்ய சபா எம்.பி. ரகுநாத் மொஹபத்ரா காலமானார்.இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், எல்.எல்.ஏக்கள், அதிகாரிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜ்ய சபா எம்.பி.ரகுநாத் மொஹபத்ரா இன்று காலமானார். அவருக்கு வயது 78. அவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின் மதியம் 3.49 மணிக்கு ரகுநாத் மொஹபத்ரா உயிரிழந்தார்.
ரகுநாத் உயிரிழந்த தகவலை எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் கீதாஞ்சலி உறுதிப்படுத்தியுள்ளார். பெயர்பெற்ற சிற்பக் கலைஞரான ரகுநாத் மொஹபத்ரா பத்ம பூஷன் விருது பெற்றவர்.
ரகுநாத் மொஹபத்ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.