தாய் என்பவர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் முதல் உறவாக இருக்கிறார்கள். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இவை எல்லாவற்றிற்கும் மற்ற எந்த உறவுகளும் இல்லையென்றால் நிச்சயமாக அதிக உயிரினங்கள் தாயால் தான் வளர்க்கப்படுகின்றன. தாயின் அரவணைப்பு என்பது ஒரு குழந்தைக்கு மருந்து போன்றது. மேலும் அம்மாக்கள் எப்போதும் தியாகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் தனது குழந்தைக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட மேன்மை பொருந்திய அவர்களுக்கான ஒரு தினமாகத்தான் அன்னையர் தினம் உள்ளது. எனவே இந்த நாளில் நாம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மிக முக்கியமாகும்.
இந்த கொரோனா சமயத்தில் வெளியே சென்று நாம் அவர்களுக்கு பிடித்த பரிசுகளை வாங்க முடியாது என்பதால் வீட்டில் இருந்தே அவர்களை எப்படி மகிழ்ச்சிப்படுத்தலாம் என்பதை நாம் பார்ப்போம்.
01.வீட்டு வேலை செய்தல்
வருடத்தில் 365 நாளும் ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை அல்லாமல் வீட்டு வேலை செய்பவர்களாக பெண்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதில் தாய்மார்கள் அதிகப்படியான சுமைகளை சுமக்கின்றனர். எனவே இந்த ஒரு நாள் நாம் அவர்களுக்கு விடுமுறை அளிப்போம். அவர்களுக்கு பதிலாக அனைத்து வீட்டு வேலைகளையும் ஆண்கள் செய்வதன் மூலம் அவர்களின் கஷ்டம் நமக்கு புரிவதோடு தாய்மார்களுக்கும் அந்த ஒரு நாள் விடுமுறை கிடைக்கும்.
02.கையால் செய்யப்படும் அட்டைகள்
இது ஒரு நல்ல விஷயமாகும். நமது தாய்மார்களை மகிழ்விக்க வாழ்த்து அட்டைகளை நமது கையால் படங்கள் வரைந்து செய்யப்பட்ட அட்டைகளை அவர்களுக்கு பரிசாக அளிக்கலாம். எப்படி வாழ்த்து அட்டை செய்வது என்பது குறித்து உங்களுக்கு தெரியவில்லை எனில் நீங்கள் யூ ட்யூப் உதவியை நாடலாம்.
03.ஐஸ்க்ரீம் செய்யலாம்.
நமது அம்மாக்கள் பலருக்கு பிடித்த பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது. உங்களது இல்லத்தில் குளிர்சாதன பெட்டி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எளிதாக ஐஸ் க்ரீம் செய்யலாம். மேலும் உங்களுக்கு அது எப்படி செய்வது என தெரியவில்லை எனில் உங்கள் தாயிடம் உதவி கேட்கலாம். மேலும் அவர்களுக்கு பிஸ்கட் போன்ற உணவுகளையும் செய்து தரலாம்.
04.சினிமா
அன்னையர் தினத்தன்று அம்மாக்களை மகிழ்விக்க சினிமாவிற்கு கூட்டி செல்லலாம். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் வீட்டிலேயே அனைவரும் ஒன்றாக இணைந்து ஏதாவது திரைப்படத்தை பார்க்கலாம். தாய்க்கு பிடித்த திரைப்படங்களை வகைப்படுத்தி அவற்றை அன்று போட்டு பார்க்கலாம்.
எனவே நம்மால் முடிந்த எதாவது ஒரு விஷயத்தை செய்து அவர்களை இந்த அன்னையர் தினத்தில் மகிழ்ச்சிப்படுத்துவோம்.