கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நாளை முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் அரசு ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் மாநிலத்தில் வீட்டுக்கு மதுபானங்களை வழங்க அனுமதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரில் எதிர்க்கட்சியான பாஜக இந்த முடிவு குறித்து ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்களின் போது மருத்துவ வசதிகளுக்கு பதிலாக மக்களுக்கு மதுபானங்களை வழங்குவதே மாநில அரசின் முன்னுரிமை என்று தெரிவதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.
ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் வீட்டுக்கு மதுபானம் வழங்க அனுமதிக்க மாநில வணிக வரித்துறை நேற்று வெளியிட்டுள்ள உத்தரவுப்படி கலால் ஆணையருக்கு அனுமதி அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊரடங்கின் போது, மாநிலத்தில் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மது உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து மற்றும் மதுபானங்களை வைத்திருப்பதைக் கட்டுப்படுத்த, நாளை முதல் ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் அதன் வீட்டு விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று கலால் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீட்டுக்கு மதுபானம் வழங்குவதற்கான நேரம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகத்தால் நேரங்களை மாற்ற முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.எஸ்.எம்.சி.எல்) எந்தெந்த கடைகள் வீட்டு விநியோக சேவையை வழங்கும் என்பதை முடிவு செய்யும். மேலும் வாடிக்கையாளர்கள் ஆர்டரை வழங்கும்போது முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.
வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் ஐந்து லிட்டர் மதுபானங்களை ஆர்டர் செய்யலாம் மற்றும் வீட்டு விநியோக சேவைக்கு ரூ 100 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். இது சம்பந்தப்பட்ட கடையிலிருந்து 15 கி.மீ தூரத்திற்குள் கிடைக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.