மேற்கு காபூலில் ஒரு பள்ளி அருகே நேற்று வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50’க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அங்கிருந்து வரும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலிபான் தாக்குதல்களைத் தடுக்க அரசாங்கப் படைகள் எதிர் தாக்குதலைத் தொடங்கிய நிலையில் பயங்கரவாதிகள் தரப்பில் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தன என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
“கடந்த 48 மணி நேரத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நஹ்ரின், பாக்லான்-இ-மார்க்காசாய் மற்றும் டான்-இ-கோரி மாவட்டங்கள் மீதான தலிபான் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
அந்த பகுதிகளில் தலிபான் தாக்குதல் முற்றிலும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். தலிபான் தீவிரவாதிகள் கடந்த சில நாட்களாக பாக்லான் மாகாணத்தின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பாக்லானில் ராணுவ படைகளின் உறுப்பினராக பணியாற்றும் பிரிகேடியர் சஃபிஹுல்லா முகமதி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த இரண்டு நாட்களில் சுமார் 100 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பள்ளி வளாகம் அருகே குண்டு வெடித்து 25 பேர் இறந்துள்ளது அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் ஆப்கானிஸ்தான் அரசுத் தரப்பிலிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.