முல்லைத்தீவில் 8 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்கும் அனைத்து முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளை ஞாயிற்றுக்கிழமை மகாவலி அதிகாரசபையிடம் அவை ஒப்படைக்கப்படுமென வடக்கில் வெளியான செய்திகள் தவறானவை. அப்படியொன எந்த முயற்சியும் நடக்கவில்லையென அமைச்சர் சமல் ராஜபக்ச, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டு, நாளை மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது, போகஸ்வெவவில் நடக்கும் நிகழ்வில் முறைப்பாடு காணிகள் ஒப்படைக்கப்படும் என இன்று யாழிலிருந்து வெளியான உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், அந்த செய்தி தவறானது. ஏற்கனவே அச்சிடப்பட்ட அழைப்பிதழின் அடிப்படையில் அப்படியான தகவல் பரவியிருந்தது.
இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று (8) காலையில் தொலைபேசி வழியாக அமைச்சர் சமல் ராஜபக்சவை தொடர்பு கொண்டு கல்முனை விவகாரம் மற்றும் மகாவலி அதிகாரசபையின் முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு இடம்பெறாது என சமல் ராஜபக்ச தெரிவித்தார். ஏற்கனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் நடத்திய பேச்சில் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் மீறப்படாது என்பதையும் உறுதி செய்தார்.
எனினும், மகாவலி அதிகாரசபை தொடர்பான அச்சம் தேவையற்றது, நவீன முறையில் நீர்வழங்கல் திட்டத்திற்காகவே அந்த காணிகள் அதிகாரசபைக்குள் உள்வாங்க திட்டமிடப்பட்டது, குடியேற்றங்கள் நடத்த மாட்டோம் என சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
எனினும், அரசியல் தீர்வு கிடைக்காத நிலையில், காணி அபகரிப்புக்கள் பிற இடங்களில் நடக்கும் நிலையில், இனப்பரம்பலை பாதிக்கும் விதமான குடியேற்றங்கள் நடக்கும் அச்சம் மக்களிடம் இருப்பதை சுட்டிக்காட்டினார் மாவை.
கல்முனை விவகாரத்தில், கடந்த அரசில் எட்டப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்படி மாவை சேனாதிராசா வலியுறுத்தினார்.