ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் தீவிரமாகி இருப்பதால் அங்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ஜப்பானில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால் டோக்கியோ, ஒசாகா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை இம்மாதம்வரை நீட்டிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மார்ச் மாதம் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதலே அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஜப்பானில் ஒலிம்பிக் நடைபெறவதற்கு இன்னும் 80 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளன.ஜப்பானில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டோக்கியோவில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.