மகேந்திரசிங் தோனியின் கேப்டன்ஸியை குறைத்து மதிப்பீடு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என நியூசிலாந்து வீரர் பேசியுள்ளார்.
ஐபிஎல் 13ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாகச் சொதப்பி, முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அணியில் மூத்த வீரர்கள் அதிகம் இருப்பதுதான் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. இதனால், 14ஆவது சீசனில் சிஎஸ்கேவில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. மூத்த வீரர் மொயின் அலி போன்றவர்களை மினி ஏலத்தின்போது சிஎஸ்கே தட்டித் தூக்கியது. இளம் வீரர்களை ஏலத்தின்போது அதிகம் கண்டுகொள்ளவில்லை. இதனால், சிஎஸ்கே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்த சமயத்தில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த நியூசிலாந்து அணி முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14ஆவது சீசனிலும் கடைசி இடத்தை பிடிக்கப்போவது உறுதி எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், நடந்த கதை வேறு. 13ஆவது சீசனில் இருந்த சிஎஸ்கேவுக்கும் 14ஆவது சீசனில் இருந்த சிஎஸ்கேவுக்கும் நிறைய மாற்றங்கள் இருந்தது. இந்த சீசனில் மொத்தம் 7 போட்டிகள் பங்கேற்ற சிஎஸ்கே 5 வெற்றிகளை குவித்து, தற்போது புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள நியூசிலாந்து அணி வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஸ்காட் ஸ்டைரிஸ், சிஎஸ்கேவை நான் தவறாகக் கணித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார். “கடந்த சீசனில் சிஎஸ்கே படுமோசமாகச் சொதப்பியது. இந்த சீசனிலும் சொதப்பும் எனத் தெரிவித்திருந்தேன். ஆனால், அதிசயத்தக்க வகையில் சிஎஸ்கே அபாரமாக விளையாடியது” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய இவர், “தோனியின் கேப்டன்ஸியை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். ஒரே வருடத்தில் அணியை இவரால் மாற்றியமைக்க முடியாது என நினைத்தேன். ஆனால், அவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு மொயின் அலியை 3ஆவது இடத்தில் களமிறக்கி அணியின் பேட்டிங் வரிசையை சமநிலைப் படுத்திவிட்டார். தவறாகக் கணித்தமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.