அதிமுக வெற்றி பெற்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் வரும் 9ஆம் திகதி பதவியேற்க உள்ளதாக வைக்கப்பட்ட கல்வெட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் காசி அன்னபூரணி கோயில் நிர்வாகம் சார்பாக கடந்த மாதம் 30ஆம் திகதி கல்வெட்டு ஒன்று தயார் செய்யப்பட்டது. அதில் 2021 தேர்தலில் அதிமுக 3வது முறையாக வெற்றி பெற்று முதல் வராக பழனிசாமியும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பதவியேற்பு விழா மே 9ஆம் திகதி நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே தயார் செய்த இந்தக் கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தகவலறிந்த சின்னமனூர் காவல்துறையினர் கோயிலுக்கு வந்து கல்வெட்டை பறிமுதல் செய்தனர். தற்போது இக்கல் வெட்டு படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இக்கோயிலை தலைமைக் காவலராக இருந்த வேல்முருகன் நிர்வாகம் செய்து வருகிறார். அதிமுக விசுவாசியான இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதித்தபோது காவலர் சீருடையில் கோயிலில் முடிகாணிக்கை செலுத்தினார். மேலும் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக ஈவிகேஎஸ்.இளங் கோவனை கண்டித்து சீருடையிலே போராட்டம் நடத்தினார். இதனால் இவர் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டார். கடந்த மக் களவைத் தேர்தலின்போதும் முடிவு வெளியாகும் முன்பே, ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக கோயிலில் கல்வெட்டை வைத்தது குறிப்பிடத்தக்கது.