யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சிறிசபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்விற்கு எதிராக நடவடிக்கையெடுக்க சில தரப்புக்கள் முனைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோண்டாவில், அன்னங்கை பகுதியில் சிறிசபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் என கூறி, ரெலோவினர் இன்று அஞ்சலி நிகழ்வை நடத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். வலி கிழக்கு தவிசாளர் தி.நிரோஷ் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடந்தன.
இதன்போது, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் அங்கு சென்று, அஞ்சலி நிகழ்வில் தலையீடு செய்திருந்தனர். சுகாதார விதிமுறைகளிற்கு இணங்கவே அஞ்சலியை செய்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
காணிக்குள் அத்துமீறி நுழைந்ததாக முறைப்பாடு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற சாரப்பட பொலிசார் தம்மிடம் வினவியதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காணி உரிமையாளர் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
வருடாந்தம் இந்த இடத்தில் சிறிசபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு நடந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு தரப்பினர் காணி உரிமையாளருக்கு நெருக்கடி கொடுத்து, அந்த காணிக்கு வேலி இட வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அஞ்சலி நிகழ்வை தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காணிக்குள் நுழைந்த ரெலோ அமைப்பினர் அஞ்சலி நிகழ்வை நடத்தினர்.
வலி கிழக்கு தவிசாளர் அத்துமீறி காணிக்குள் நுழைந்ததாக குறிப்பிட்டு, அவர் மீது முறைப்பாடு பதிவு செய்யுமாறு காணி உரிமையாளருக்கு அழுத்தம் கொடுப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.