கொரோனா 2வது அலை தீவிரம் காட்டி வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி கேரளா மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் அமல்படுத்தி வருகின்றன. தற்போது கோவிட்-19 இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் மூன்றாவது அலையை தடுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரை புதிய பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் 41,953 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 17,43,933ஆக அதிகரித்துள்ளது. 58 பேர் பலியாகியுள்ளனர். 23,106 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர்.
தற்போது 3,75,657 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், கோழிக்கோடு, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், ஆலப்புழா, பாலக்காடு, திருவனந்தபுரம், கன்னூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக எச்சரித்தார்.
ஏற்கனவே வார இறுதி ஊரடங்கு கேரளாவில் அமலில் இருக்கிறது. இந்த சூழலில் மாநில அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 8ஆம் தேதி காலை 6 மணி முதல் மே 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது கோவிட்-19 இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், மாநிலம் முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்று பரவும் விகிதம் குறையவில்லை. எனவே புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.