கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட விஜே சித்ராவின் பிறந்தநாள் அன்று கேக் வெட்டி அதை அவரின் புகைப்படத்திற்கு அப்பா ஊட்டியதை பார்த்த ரசிகர்கள் கண் கலங்கிவிட்டார்கள்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ரசிகர்கள் சித்ராவை முல்லை என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.
எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்த சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி ஷூட்டிங்கில் இருந்து ஹோட்டல் அறைக்கு திரும்பியதும் தன் கணவர் ஹேமந்தை வெளியே செல்லுமாறு கூறிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை சித்ரா என்று அவரின் தோழிகள் தெரிவித்தனர். என் மகள் தப்பானவன் கையில் சிக்கிவிட்டார் என்று சித்ராவின் அப்பா கூறினார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ராவின் பிறந்தநாளை அவரின் பெற்றோர் கனத்த இதயத்தோடு கொண்டாடியிருக்கிறார்கள். சித்ராவின் புகைப்படத்திற்கு முன்பு கேக் வெட்டினார்கள். அந்த கேக்கை சித்ராவின் புகைப்படத்திற்கு அவரின் அப்பா ஊட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மகள் இல்லை என்பது தெரிந்தும் அவரின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டும் அப்பாவை பார்த்து சித்ராவின் ரசிகர்கள் கண் கலங்கிவிட்டனர். அக்கா, எங்கே இருக்கிறீர்கள். உங்களின் அப்பா, அம்மா படும் கஷ்டத்தை பாருங்கள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரையில் பிரபலமான சித்ராவுக்கு பெரிய திரையில் ஹீரோயினாகும் ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் தான் அவர் சபரிஷ் இயக்கத்தில் கால்ஸ் படத்தில் நடித்தார். தன் முதல் படம் ரிலீஸுக்கு முன்பே சித்ரா இறந்துவிட்டார்.
அதுவும் கால்ஸ் படத்திற்காக வாங்கப்பட்ட நைட்டியை அணிந்து சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அதை பார்த்த கால்ஸ் படக்குழு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தது. படத்தை பார்த்த அனைவரும் சித்ராவின் நடிப்பை பாராட்டியதோடு, இதை பார்க்க அவர் உயிருடன் இல்லையே என்று ஃபீல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.