தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மே தினத்தை முன்னிட்டு கொரோனாப் பேரிடரின் முடக்கத்தால் தொழில் வாய்ப்பினை இழந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக மே தின ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது பொதுக்கூட்டத்தை இரத்துச் செய்து சுகாதார நடைமுறைகளைப் பேணி அலுவலக மட்டத்திலான கருத்துப்பகிர்வு ஒன்றை மே தினத்தன்று நிகழ்த்தி இருந்தது.
இதன்போது, கொரோனாப் பேரிடர் முடக்கத்தால் தொழில் வாய்ப்பினை இழந்த குடும்பங்களில் இருந்து சம்பிரதாய பூர்வமாக ஐவர் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மகேசன் கஜேந்திரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த வேளையில் 3000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வீடு தேடிச் சென்று எங்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொரோனாத் தொற்றுக் காரணமாக திருநெல்வேலி பாரதிபுரம் கிராமம் முடக்கப்பட்டிருந்தபோது 150 குடும்பங்களைத் தெரிவுசெய்து உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தோம்.
அடுத்த கட்டமாக உலகத் தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி அன்று உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் 100 குடும்பங்களைத் தெரிவு செய்திருந்தோம். ஆனால், அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து வழங்குவது நோய்த் தொற்றுக்கு வழிகோலும் என்பதால் அவ்வாறு செய்யாது, மே தினத்தன்று சம்பிரதாய பூர்வமாகக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கியிருந்தோம். ஏனையவர்களுக்கு வீடு தேடிச் சென்று வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.