மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த 292 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடந்தது. 2 தொகுதிகளி்ல் வேட்பாளர்கள் திடீரென உயிரிழந்துவிட்டதால், ஒத்திவைக்கப்பட்டது. இந்த 292 தொகுதிகளில் 198 தொகுதிகளி்ல திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது, பாஜக 91 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இப்போதே வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிவி்ட்டனர். இதே வாக்கு நிலவரம் நீடித்தால், 3வது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். மீண்டும் முதல்வராக மம்தா பானர்ஜி வருவார்.
பாஜக எம்.பி.க்கள் இருவர் தேர்தலில் போட்டியி்ட்டு பின்னடைந்துள்ளனர். டோலிகுன்ஜே தொகுதியில் போட்டியிட்ட பாஜக எம்.பி. பபுல் சுப்ரியா, சூன்சுரா தொகுதியில் போட்டியி்ட்ட பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி இருவரும் பின்னடைந்துள்ளனர்.
அதேசமயம், பாஜக எம்.பி. நிஷித் பிரமானிக் தினாஹட்டா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட தொகுதியை விட்டுக்கொடுத்த திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஷோபன்தீப் சாத்தோபத்யாயே, பாபானிபூரில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ருத்ரானில் கோஷைவிட 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.