தமிழகத்துடன் சேர்ந்து கேரளாவிலும் ஏப்ரல் 6’ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் முதல் ரவுண்ட் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் இடது முன்னணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கேரளாவில் தற்போதைய ஆளும் இடது முன்னணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 6’ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் மாநில முதல்வர் பினராயி விஜயன், அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மெட்ரோ மேன் ஸ்ரீதரன், முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முதல் ரவுண்ட் முடிவில் ஆளும் இடது முன்னணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.இடது ஜனநாயக முன்னணி 80 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜக கூட்டணி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலில் கேரளாவில் வெறும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றிய பாஜக, இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.