24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இந்தியா

திமுக ஆட்சியமைப்பது உறுதி: புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது: ஸ்டாலின்

திமுகவின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 02) வெளியிட்ட அறிக்கை:

“தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 30 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. பெரும்பான்மைத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருப்பதையே தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக மாலையில் இருந்து வரத் தொடங்க உள்ளன. ஆட்சி அமைக்க இருப்பது திமுகதான் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது குளறுபடிகள் நடந்து விடாமல் தடுக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்து விட முடியாது என்றாலும், எங்காவது ஒரு அதிகாரி, அதைச் செய்து விடக்கூடும் என்பதால் அதிக கவனம் அவசியம்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

ஏதேனும் காரணம் காட்டி வெற்றிச் சான்றிதழை வழங்கக் காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது. வாக்கு எண்ணிக்கையை முழுமையாக முடித்து, வெற்றிச் சான்றிதழைப் பெறுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.

நமது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட வெற்றியாகும். இருப்பினும், கொரோனா என்ற பெருந்தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். பெருந்தொற்று தொற்றிக் கொள்ளவும், பரவவும் காரணம் ஆகிவிடக்கூடாது. பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும்.

திமுகவின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம்!”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

Leave a Comment