29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் 6 கிராமசேவகர் பிரிவுகள் மகாவலி அதிகாரசபைக்கு தாரை வார்ப்பு: ஆளுனர் செயலகத்தில் பிக்குகளையும் இணைத்து இரகசிய கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 கிராம சேவகர் பிரிவுகளை சத்தம் சந்தடியின்றி மகாவலி எல் வலயத்தின் கீழ் கொண்டு வரும் இரகசிய முயற்சி வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த காணிகளை மகாவலி அதிகாரசபையிடம் வழங்க சம்மதம் தெரிவித்து வடக்கு அரச நிர்வாகம் எழுத்துமூல அறிவித்தலும் வழங்கி விட்டது என தமிழ்பக்கம் நம்பகரமாக அறிகிறது.

மகாவலி அதிகாரசபைக்கு முல்லைத்தீவின் ஒரு பகுதியை வழங்குவது தொடர்பான உயர்மட்ட கூட்டம்- பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கி- வடக்கு ஆளுனர் தலைமையில், மிகமிக இரகசியமாக நடத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், வடக்கு ஆளுனர், வடக்கு பிரதம செயலாளர், காணி திணைக்களம், மகாவலி அதிகாரசபையின் எல் வலய முகாமையாளர், வெலிஓயாவை சேர்ந்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வடமாகாண நிர்வாக அதிகாரத்தின் கீழ் உள்ள இந்த நிலங்களை, சத்தம் சந்தடியின்றி, மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைப்பதே இந்த கூட்டத்தின் நோக்கம்.

இந்த 6 கிராம சேவகர் பிரிவுகளையும் மகாவலி எல் வலயத்தில் இணைப்பதற்கான முயற்சி அண்மைய சில காலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இது பற்றிய தகவல்கள் வெளியானதும், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு கடிதமொன்றை சமல் ராஜபக்சவிடம் கையளித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக அவருடன் கலந்துரையாடலொன்று நடந்து, அந்த திட்டம் மேற்கொண்டு முன்னெடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், வடக்கு ஆளுனரின் ஊடாக திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குளாய் நீரேரி தொடக்கம் நாயாறு நீரேரி வரையான ஒடுங்கிய- வடக்கு கிழக்கு தமிழர் நிலத்தின் இணைப்பு பகுதியாக அமைந்துள்ள 6 கிராம சேவகர் பகுதிகளை மகாவலி எல் வலயத்திற்குள் இணைப்பதன் பின்னணியில், தமிழர் தாயக கோரிக்கையை நிரந்தரமாக வலுவிழக்கச் செய்யும் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக தமிழ் அரசியல் கட்சிகளும், புத்திஜீவிகளும் இந்த திட்டத்தை எதிர்த்து வந்தனர்.

தேர்தல் நடைபெற்று மாகாணசபை ஆட்சி அமைந்தால், அதன் பின்னர் மாகாணசபை அந்த காணி நிர்வாகத்தை கையளிக்காது என்பதால், அரசின் பிரதிநிதியான ஆளுனரின் மூலம் தற்போதே தேவையான காணிகளை கைமாற்றி விடுவதே அரசின் திட்டமென்பதே, தமிழ் அரசியல் கட்சிகளின் விமர்சனமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பௌத்த பிக்குகளையும் அழைத்து, அரச நிர்வாக கூட்டமொன்றை வடக்கு ஆளுனர் நடத்தி காணிகளை கையளிக்கும் சம்மதத்தை வழங்கியுள்ளார்.

ஆளுனரின் சம்மதத்தை தொடர்ந்து, மகாவலி அதிகாரசபைக்கு வடக்கு நிர்வாகம் உத்தியோகபூர்வமாக- எழுத்துமூலமாக – தமது சம்மதத்தை அறிவித்து விட்டதாக தமிழ்பக்கம் அறிந்தது.

சர்ச்சைக்குரிய கொக்குளாய் விகாரை, தமிழ் மக்கள் தமது பாரம்பரிய உரித்திற்காக தொடர்ந்து போராடி வரும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்பனவும் இந்த நிலப்பகுதிக்குள்ளேயே வருகின்றன. நீராவியடி பிள்ளையார் ஆலயம் பிரதேச செயலகத்தின் காணி அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளதாலேயே இதுவரை தமிழ் மக்கள் அதை உரிமை கோரவும், வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடிந்துள்ளது என்றும், மகாவலி அதிகாரசபையின் கீழ் அவை சென்றால், அந்த நிலைமை இருக்காது என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரையில் தற்போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதும், அந்த பகுதியில் வெளிமாவட்ட சிங்கள மக்கள் விவசாயத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!