யாழ் மாநகரசபையில் தற்காலிக ஊழியர் நியமனத்தில் பகிரங்க கேள்வி கோரல் இடம்பெறாது. என்னிடம் நேரில் வந்து வேலை கேட்பவர்களிற்கே வேலை கொடுப்பேன் எகத்தாளமாக பதிலளித்துள்ளார் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.
யாழ் மாநகரசபையின் தற்காலிக ஊழியர்கள் சிலர் முதல்வரால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட விடயம் நேற்று யாழ் மாநகரசபை அமர்வின் போது சர்ச்சையானது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
யாழ் மாநகரசபையில் தற்காலிக ஊழியர்களாக 3 பேர் அண்மையில் முதல்வரினால் நியமிக்கப்பட்டிருந்தனர். யாழ் மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரின் மகன், நல்லூர் பிரதேசசபையில் தனது அணியை சேர்ந்த ஒருவரின் மகன், கொக்குவிலை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் இறுதி இருவரும் யாழ் மாநகரசபை எல்லைக்குள் வசிப்பதில்லை.
இந்த விவகாரம் மாநகரசபையில் கடந்த அமர்வில் சர்ச்சையான போது, அடுத்த அமர்வில் பதிலளிப்பதாக முதலவர் வி.மணிவண்ணன் தெரிவித்திருந்தார்.
எனினும், நேற்றைய அமர்விலும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்தார்.
சபை அமர்வு முடியும் தறுவாயில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிடுக்குப்பிடி பிடித்ததால், தவிர்க்க முடியாமல் பதிலளித்தார்.
முன்னைய முதல்வர் ஆனோல்ட்டும் இதேவிதமாகவே செயற்பட்டதாகவும், தற்காலிக ஊழியர் நியமனத்தில் தற்துணிவுடனேயே- ஆனோல்ட் பாணியில்- முடிவெடுப்பேன் என்றும் கூறினார்.
மேலும், மின்சார வேலை பகுதிக்கு 4 ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர்களையும் விருப்பம் போலவே நியமிப்பேன் என்று தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு பற்றிய பகிரங்க அறிவித்தல் செய்யப்படுமா என கூட்டமைப்பு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பிய போது, பகிரங்க அறிவித்தல் விடுக்கப்படாது என்றும், தன்னிடம் வேலை கோரி விண்ணப்பம் தருபவர்களிலிருந்தே தெரிவு செய்யப்படுவார்கள் என பதிலளித்தார்.
யாழ் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காதவர்களிற்கு ஏன் நியமனம் வழங்கினீர்கள் என கேள்வியெழுப்பிய போது, யாழ் மாநகரசபை எல்லைக்குள் இருந்து போதிய வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவில்லையென்றார்.