டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற கட்டுப்பாடுகளால், அமெரிக்க மக்கள்தொகை வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது மிக மெதுவான வேகத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2020’ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட அமெரிக்க நாட்டில் 33,14,49,281 மக்கள் வாழ்ந்ததாக அதிகாரப்பூர்வ 10 ஆண்டு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.இது 2010’ல் இருந்து 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. 2010’இல் உத்தியோகபூர்வ மக்கள் தொகை 30,87,45,538 ஆக இருந்தது என மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
10 ஆண்டு விரிவாக்கம் முந்தைய தசாப்தத்தை விட கணிசமாக மெதுவாக இருந்தது. 2000-2010’இல் மக்கள் தொகை 9.7 சதவிகிதம் அதிகரித்தது. மேலும் 1930-1940 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவும் உலகமும் பெரும் மந்தநிலையில் மூழ்கியிருந்தபோது, இது 7.3 சதவிகிதமாக இருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு “பேபி பூமர்” பிறப்பு அதிகரிப்பால் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் துரிதப்படுத்தப்பட்டது. ஆனால் 1950’களின் முற்பகுதியில் இருந்து மிகவும் நிலையான சரிவில் உள்ளது.
1990’களில் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர், பெரும்பாலும் மெக்ஸிகன் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தபோது அது சில ஆண்டுகளாக மட்டுமே தடைபட்டது.அப்போதிருந்து, வீழ்ச்சி கூர்மையாக இருப்பதாக தரவு காட்டுகிறது.
கடந்த பத்தாண்டுகளில், 2008 நிதி நெருக்கடியிலிருந்து ஆழ்ந்த, நீடித்த பொருளாதார சரிவு மந்த நிலையால், குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் பல மெக்சிகன் குடியேறியவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.
கூடுதலாக, 2017’இல் டிரம்ப் ஜனாதிபதியான பிறகு, சட்டப்பூர்வ குடியேற்றத்தை கடுமையாகக் குறைக்கவும், சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்தவும் முயன்றார். இது மக்கள்தொகை வளர்ச்சியில் கடும் வீழ்ச்சியைக் கொடுத்துள்ளது.