12 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் இருந்து கேரளா வந்த தம்பதியினர், தெரு நாய்களின் பரிதாப நிலையை பார்த்து, அவற்றை கவனித்து கொள்வதற்காக லண்டன் திரும்பாமல், கேரளாவிலேயே தங்கியதுடன், 140 தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேரி மற்றும் ஸ்டீவ் தம்பதியினர் தெரு நாய்களின் நிலையை பார்த்து அவைகளுக்காக இங்கேயே தங்க முடிவு செய்தனர். லண்டனில் இருந்து இரண்டு வார விடுமுறையை கழிக்க, கேரள மாநிலம் கோவளம் வந்த அவர்கள், இந்த கடலோர நகரத்தில் உள்ள தெரு நாய்களின் நிலையை பார்த்து பரிதாபம் அடைந்தனர். அவைகளுக்காக இந்தியாவிலேயே தங்க முடிவு செய்த இந்த தம்பதியினர், 140 தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அவைகளுக்கு உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளையும் அவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
முதலில் இந்த ஜோடி இரண்டு நாய்களை மீட்டிருக்கின்றனர். ஆனால் அதனை தத்தெடுக்க யாரும் முன்வரவில்லை. எனவே இந்தியாவில் தங்கும் முடிவுக்கு வந்த அந்த தம்பதியினர், தங்கள் டிக்கெட்டுகளை கேன்சல் செய்தனர். கடந்த 12 ஆண்டுகளாக கோவளத்தில், ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் இந்த ஜோடிகள், நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். முதலில் இரண்டு நாய்களாக இருந்த எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்து, தற்போது 140 நாய்கள் அவர்களிடம் இருக்கின்றன. தெரு நாய்களை காப்பாற்றுவதும், அதனை பாதுகாப்பதையும் தங்கள் வாழ்நாள் பணியாக மாற்றிக் கொண்டனர் இந்த இரக்க மனம் கொண்ட தம்பதியினர்.
தற்போது 52 வயதான மேரி, மிடில்செக்ஸில் தன்னார்வல தொண்டு நிறுவனம் ஒன்றில் தன்னார்வலராக பணியாற்றினார். 62 வயதான அவரது கணவர் ஸ்டீவ், ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிராட்போர்டில் ஒரு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். கோவளத்தில், ‘ஸ்ட்ரீட் டாக் வாட்ச்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கி, தங்கள் பகுதியில் இருக்கும் தெரு நாய்களை மீட்டு, அவைகளுக்கு தடுப்பூசி, கருத்தடை செய்து வருகின்றனர். தங்கள் சொந்த பணம் 3.1 கோடி ரூபாயை இவர்கள் தங்கள் தொண்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அந்த மனசு தான் சார் கடவுள்!