கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிங்கள மொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட 84 அரச உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் சில நாட்களின் முன்னர் அரச உத்தியோகத்தர்களிற்கான சிங்கள மொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கரவெட்டி பிரதேச செயலகம், பருத்திததுறை பிரதேச செயலகம், மற்றும் பல அரச நிறுவனங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட திக்கத்தை சேர்ந்த பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது கணவர் அனுராதபுரத்தில் நீர்பாசன திணைக்களத்தில் பணியாற்றுபவர். அந்த அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. கடந்த வாரம் அவர் பருத்தித்துறை திக்கத்திலுள்ள வீட்டுக்கு வந்திருந்தார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மனைவி, பிள்ளை உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களும் தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டது.
அவரது மனைவி கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரிபவர். அவரும் கரவெடடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொணடிருந்தார். இதனால், நிகழ்வில் கலந்து கொண்ட 84 அரச உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் கரவெட்டி பிரதேச செயலகத்தை சேர்ந்த 50 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.
அது தவிர, வடமராட்சி பகுதியை சேர்ந்த பல அரச நிறுவனங்களை சேர்ந்த 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொற்றிற்குள்ளான அரச உத்தியோகத்த தம்பதி 23ஆம் திகதி தமது பிள்ளையை முன்பள்ளியில் இணைத்திருந்தனர். எனினும், அந்த பிள்ளைக்கு தொற்று ஏற்படவில்லை. தொற்றிற்குள்ளான தாயார் முன்பள்ளிக்கு சென்றார் என்பதன் அடிப்படையில், முன்பள்ளியுடன் தொடர்புடைய மற்றும அவர்களுடன் தொடர்புடைய 28 குடும்பங்கள் திக்கம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.