பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருத்திரிபடைந்த B.1.1.7 கொரோனா வைரஸே இலங்கையில் பரவுவதாக சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபை பகுதி, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் பகுதிகளில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 43 மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
உருத்திரிபடைந்த இந்த புதிய வகை கோவிட் இனத்தால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஏப்ரல் 08 ஆம் திகதி பொரலஸ்கமுவவில் உள்ள ஒரு வேலைத் தளத்தில் அடையாளம் காணப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் வேகமாக பரவி வரும் கோவிட் நிலைக்கு இந்த புதிய வகையே முக்கிய காரணம் என்றும், தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட கோவிட் மாதிரிகள் குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முடிவுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும் என்றும் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.
B.1.1.7 முதன்முதலில் இங்கிலாந்தில் கென்ட் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டது. இந்த திரிபு சராசரி SARS கோவிட் வைரஸை விட 55 சதவீதம் வேகமாக பரவும் அபாயமானது.
இந்த வைரஸால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.