கொரோனா வைரஸ் பரவலை அடுத்து திருப்பதியில் மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என திருப்பதி மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருப்பதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக நாளை முதல் மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட டாஸ்க்போர்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஆந்திர மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதன் காரணமாக திருப்பதி மாநகராட்சியில் எம்எல்ஏ கருணாகர ரெட்டி தலைமையில் மேயர் சிரிஷா, ஆணையாளர் கிரிஷா, திருப்பதி எஸ்.பி. வெங்கடஅப்பல் நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கருணாகர ரெட்டி, திருப்பதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இன்று முதல் திருப்பதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு வணிகர் சங்கத்தினர் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருப்பதியில் காய்கறி மார்க்கெட்டிற்கு ஒரே நேரத்தில் பொதுமக்கள் சேர்வதை தடுக்கும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் காய்கறி மார்க்கெட் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
புகழ்பெற்ற திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழாவும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து வார்டு செயலகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் தாங்களாக முன்வந்து ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.