ஆந்திரா : கொரோனா உறுதியான நிலையிலும் விடுமுறை தராமல் கட்டாய பணி கொடுத்ததால் தற்போது மோசமான நிலையில் உள்ளதாக காவலர் ஒருவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் போது வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கணேஷ். கடந்த 21ம் தேதி கணேஷுக்கு லேசாக கொரோனா அறிகுறி இருந்ததன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் ஐந்து நாட்கள் வீட்டில் இருந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர் காசா உசேனிடம் தெரிவித்துள்ளார். உதவி ஆய்வாளர் காசா உசேன் விடுமுறை அளிக்காமல் தன்னை அனந்தபுரம், தாடிபத்திரி, குத்தி செல்லும்படி பணி அழுத்தம் கொடுத்து வேலை செய்ய வைத்ததாகவும் இதனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
தற்போது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்று கொண்டு இருக்கக்கூடிய எனக்கு உயிருக்கு ஏதாவது ஆனால் எங்கள் குடும்பத்தினரை யார் கவனிப்பார்கள் எனது உயிருக்கு ஏதாவது ஆனால் அதற்கு முழு பொறுப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று செல்பி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது