அல்பேனியா தலைநகரில் தறிகெட்டு ஓடும் காரினால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, தன் உயிரையும் பொருட்படுத்தாமல், காரின் ஜன்னல் வழியாக ஒருவர் காரின் உள்ளே செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரலாகி இருக்கும் இந்த வீடியோவில், அல்பேனிய தலைநகர் டிரானாவில் உள்ள ஸ்கந்தர்பேக் சதுக்கத்தின் தெருக்களில் ஒரு கார் மோதும் பயங்கரமான தருணத்தைக் காட்டுகிறது. முதலில் வட்டமடிக்கும் காரை சுற்றி மக்கள் கூடியிருப்பது தெரிகிறது. அவர்களை மோதுவது போல் கார் செல்கிறது. சிலர், டிரைவரை காருக்குள் இருந்து வெளியே இழுக்க முயற்சி செய்கின்றனர். சில நொடிகளுக்கு பின், ஒரு மனிதன் ஓடி வந்து, திறந்திருக்கும் கார் கண்ணாடி ஜன்னல் வழியாக காருக்குள் குதிக்கிறார்.
காரை ஓட்டிய நபர், நகரத்திற்குள் 3 கார்களை இடித்து சேதப்படுத்தி இருப்பதாக அல்பேனிய போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது, அந்த டிரைவர் போதையில் இருந்ததாகவும், மக்கள் கொரோனா தடுப்பூசி பெற சதுக்கத்தில் கூடி இருந்தபோது, அப்பகுதிக்குள் காரை இந்த நபர் செலுத்தியதாகவும் போலீசார் கூறினர்.
இந்த மாத துவக்கதில், 32 வயதான முன்னாள் வால்மார்ட் ஊழியர் ஒருவருக்கு, வேலை பறிபோய் இருக்கிறது. அந்த விரக்தியில், கடையின் முன்பக்கம் காரை விட்டு மோதி, சேதத்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள கடையிலும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளார். பெரும் சேதத்தை உருவாக்கிய பின்பு தான் அவர் தனது காரை நிறுத்தி இருக்கிறார். அவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.