இன்றைய நவநாகரீக மக்களுக்கு டாட்டூ மீது அளவு கடந்த ஆர்வம் இருப்பது உண்மையாக தான் உள்ளது. ஆனால், அதன் எல்லை இந்த அளவுக்கு நீளும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
தாய் ஒருவர், தனது மகனின் ஓவிய திறமையை அங்கீகரிக்கும் பொருட்டு, அவன் வரைந்த ஓவியத்தை, தனது கையில் டாட்டூ ஆக போட்டுக் கொண்டுள்ள சம்பவம், அமெரிக்காவில் அரங்கேறி உள்ளது.
இந்த டாட்டூ போட்டுக் கொண்ட தாய் குறித்த வீடியோ, டிக்டாக் செயலியில் பெரும் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ குறித்து பலரும் நேர்மறை மற்றும் எதிர்மறை வகையிலான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஓவியம் ஒன்றும் முற்றுப்பெறாமல் உள்ளதே என்று சிலரும், அதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லை என்றே பலரும் இந்த ஓவியம் தொடர்பான டாட்டூ குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த டாட்டூ, மற்றவர்களுக்கு வேண்டுமானால் முற்றுப்பெறாத ஓவியமாக தெரியலாம். ஆனால், இது என் மகனின் அழகிய கைவண்ணம். இது தனக்கும், தன் மகனுக்கும் மிகவும் பிடித்து இருந்ததால், இதனை டாட்டூ ஆக கையில் வடித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த டாட்டூ மோகம், பலரை தன் பிடிக்குள் வைத்துள்ளது என்று சொன்னால், அது மிகையல்ல. இதற்கு முன்னதாக, கொலம்பியாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவர் ஒருவர், கியூஆர் கோடை, தனது கழுத்துப்பகுதியில் டாட்டூ ஆக வரைந்து கொண்டு, அது செயல்படவில்லை என்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.