ஹாங்காங்கை சேர்ந்த பணக்கார பாட்டியிடம், சீன போலீஸ் அதிகாரியை போல மொபைலில் பேசிய இளைஞர் ஒருவர், 32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.240 கோடி) மோசடி செய்திருக்கிறார்.
இந்தியாவில் விபரம் அறியாதவர்களிடம், வங்கி அதிகாரி போல பேசி, ஏடிஎம் கார்டு எண்ணை பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது உண்டு. மோசடி நபர்களின் பெரும்பாலான இலக்கு வயதானவர்களாக தான் இருக்கும். பணத்தை இழந்து அவர்கள் தவிப்பது வாடிக்கையாகிப் போனது. சில ஆயிரம் முதல் லட்சம் வரையிலான பணத்தை ஏமாந்தது நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஹாங்காங் முதியவரிடம் ஒருவர் எவ்வளவு ஆட்டைய போட்டிருக்கிறார் பாருங்கள்!
உலகின் பணக்கார நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. இங்கு அதிகமான கோடீஸ்வரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங்கின் ‘பீக்’ என்ற பகுதியைச் சேர்ந்த 90 வயது கோடீஸ்வர பாட்டியை, சீன போலீஸ் அதிகாரி என இளைஞர் ஒருவர் தொடர்புகொண்டுள்ளார். உங்களிடமுள்ள பணத்தை பாதுகாப்புக்காகவும், ஆய்வுக்காவும் விசாரணை அதிகாரியின் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் அவரது வீட்டிற்கு வந்து, மொபைல் மற்றும் சிம் கார்டுகளை கொடுத்து, அதிலிருந்து தொடர்புக்கொள்ளும் படி கூறியிருக்கிறார். அவரிடமிருக்கும் பணத்தை, 11 வங்கிகளுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்.
சீன போலீஸ் தன்னை நாடு கடத்தி கொடுமைப்படுத்துவார்கள் என பயந்து போன பாட்டி, ஐந்து மாதங்களுக்கு மேலாக 32 மில்லியன் டாலர்(ரூ.243 கோடி) அனுப்பி இருக்கிறார். அந்த வீட்டில் பணியாற்றும் பெண் ஒருவர், சந்தேகப்பட்டு பாட்டியின் மகளுக்கு தகவல் தர, பாட்டி ஏமாற்றப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இம்மோசடியில் 19 வயது இளைஞர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவர, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். எவ்வளவு பணம் மீட்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.