இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த 17வது லீக் போட்டியில் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
ரோகித் ஆறுதல்
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரர் குயிண்டன் டி காக் (3) நிலைக்கவில்லை. கேப்டன் ரோகித் சர்மா (63) அரைசதம் கடந்து அவுட்டானார். அடுத்து வந்த இஷான் கிஷான் (6), சூர்யகுமார் யாதவ் (33), போலார்டு (16) நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 131 ரன்கள் அடித்தது.
ராகுல் அரைசதம்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாயங்க் அகர்வால் (25) நல்ல துவக்கம் அளித்தார். தொடர்ந்து கேப்டன் ராகுல் உடன் இணைந்த கெயில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்த சீராக ரன் வேகத்தை உயர்த்தினர். கிடைத்த கேப்பில் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் பறக்கவிட்ட ராகுல் அரைசதம் கடந்தார். இந்நிலையில் டிரெண்ட் பவுல்ட் வீசிய போட்டியின் 18வது ஓவரின் முதல் பந்தில் கிறிஸ் கெயில் சிக்சர் விளாசினார்.
அதே வேகத்தில் கேப்டன் ராகுல் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச பஞ்சாப் கிங்ஸ் அணி 17.4 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 132 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆட்டநாயகன் விருதை பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் வென்றார்.