இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். கால் நூற்றாண்டுகளாக இந்திய அணியில் அசைக்க முடியாத இடம் பிடித்த சச்சின் பல தகர்க்க முடியாத சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2012 டிசம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து கடந்த 2013 இல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழ்ந்த ஜாம்பவான் சச்சின், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். சச்சின் இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 34,000 ரன்கள் மற்றும் சதத்தில் சதம் என பெரும் பட்டியல் சாதனையை எட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இனியும் இவரின் தகர்க்க முடியாத சில சாதனைகளின் பட்டியலைப்பார்க்கலாம்.
அதிக டெஸ்ட் போட்டிகள்
சர்வதெச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர்களின் ஒருவரான சச்சின் தனது 24 ஆண்டுகால பயணத்தில் இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 175 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரர் சச்சின் தான். இவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 டெஸ்டில் விளையாடியுள்ளார்.
வெறும் இரு விதமான கிரிக்கெட் போட்டிகள் மட்டும் இடம் பெற்ற காலத்தில் சச்சின் விளையாடினார் அதனால் தான் இவரால் இந்த மைல்கல்லை எளிதாக எட்ட முடிந்தது. அதிலும் காயங்கள் காரணமாக பல போட்டிகளில் சச்சினால் விளையாட முடியாமல் போனது. இல்லை என்றால் சச்சின் எளிதாக் 225 போட்டிக்கு மேல் விளையாடியிருப்பார்.
அதிக டெஸ்ட் ரன்கள்
அதே போல இனி வரும் இளம் வீரர்களால் எட்டமுடியாத சாதனையாக பார்க்கப்படுவது அதிக டெஸ்ட் ரன்கள். 200 போட்டிகளில் விளையாடியதால் 15,000 ரன்களை கடந்துள்ளார் சச்சின். இரண்டாவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 13378 ரன்கள் அடித்துள்ளார். இனி வரும் காலத்தில் எந்த ஒரு வீரராலும் 14,000 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாது. அதனால் சச்சினின் 15,921 ரன்கள் என்ற சாதனையை தொடக்கூட முடியாது.
உலகக்கோப்பை
கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. லிஸ்ட் ஏ கிரிக்கெட் அரங்கில் 12 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடந்துள்ளது. ஆனால் இதுவரை வெறும் இரு வீரர்கள் மட்டுமே 6 முறை இந்த தொடர்களில் பங்கேற்றுள்ளனர். அதில் ஜாவித் மியாந்தத் முதல் வீரர். இதை சச்சின் 2011ல் சமன் செய்தார். இனி 2 ஆண்டுக்கு ஒரு முறை உலகக்கோப்பை நடத்தப்பட்டாலும் சச்சினின் லிஸ்ட் ஏ உலகக்கோப்பை சாதனையை சமன் செய்வது கூட கடினமானதாக பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை ரன்கள்
அதேபோல லிஸ்ட் ஏ உலகக்கோப்பை கிரிகெக் அரங்கில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் சச்சின் 2278 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில் 2000 ரன்களை கடந்த முதல் வீரரும் சச்சின் தான். இதுவரை ஒரு வீரர் கூட 1800 ரன்களைக் கூட கடந்தது இல்லை. இதனால் இனி வரும் வீரர்களுக்கு இவரின் இந்த சாதனையை தகர்ப்பது என்பதும் கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.