விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் திருமணம் ஹைதராபாத்தில் நல்லபடியாக நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமணத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்தார்கள். லாக்டவுன் நேரத்தில் தான் ஜுவாலாவுக்கு மோதிரம் அணிவித்து திருமணத்தை நிச்சயம் செய்தார் விஷ்ணு விஷால். இதையடுத்து விரைவில் தனக்கு திருமணம் என்று காடன் விளம்பர நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அதன் பிறகு திருமண பத்திரிகையை கடந்த 13ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டாவின் திருமணம் ஹைதராபாத்தில் இன்று நடந்தது. பதிவுத் திருமணம் தான். கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதால் திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக நடந்த ஹல்தி, மெஹந்தி நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
புகைப்படங்களை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த திருமணமாவது கடைசி வரை நிலைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக விஷ்ணு விஷால் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால் ஆகிய இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். அவர்களுக்கு ஆர்யன் என்கிற மகன் இருக்கிறார்.
மனைவி ரஜினியை பிரிந்த பிறகே விஷ்ணு விஷாலுக்கு ஜுவாலா மீது காதல் ஏற்பட்டது. விஷால் வீட்டு விசேஷத்தில் வைத்து தான் ஜுவாலாவை முதல்முறையாக சந்தித்ததாக விஷ்ணு விஷால் முன்பு தெரிவித்தார்.
திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜுவாலா தான் செய்ததாக விஷ்ணு விஷால் கூறினார். தான் பட வேலையில் பிசியாக இருந்ததால் எதையும் செய்ய முடியவில்லை என்றார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் தேனிலவுக்கு எங்கும் செல்லவில்லையாம்.
குடும்பத்தார், நண்பர்களுடன் சில நாட்கள் இருந்துவிட்டு அவரவர் வேலையை தொடர முடிவு செய்திருக்கிறார்களாம்.