ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவித்தாலும் பணிவுடன் இருப்பதும், எதிரணிக்கு மரியாதை கொடுப்பதும் அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.
போராடி வெற்றி
220 ரன்கள் குவித்த போதிலும் கடைசி வரை போராடியே சென்னை அணியால் வெற்றி பெற முடிந்தது. கொல்கத்தா அணி 31 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த போதிலும் ஆந்த்ர ரஸ்ஸல் 22 பந்துகளில் 54 ரன்கள் விளாசி மிளரச் செய்தார். கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு சென்னை அணிக்கு பயத்தை உரு வாக்கினார்.
66 ரன்கள் விளாசி அணியை வெற்றியின் அருகே அவர் கொண்டு சென்ற நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் கடைசி விக்கெட்டாக மறுமுனையில் இருந்த பிரஷித் கிருஷ்ணா ரன் அவுட் ஆனதால் கொல்கத்தா அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது.
எல்லா அணியிலும் ‘ஹிட்டர்கள்’
ஆட்டம் முடிவடைந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “இதுபோன்ற ஆட்டம் எனக்கு எளிதானது என்றே நினைக்கிறேன். ஏனெனில் 15 மற்றும் 16-வது ஓவரில் இருந்து ஆட்டம் பேட்ஸ்மேனுக்கும், வேகப்பந்து வீச்சாளருக்கும் இடையே இருந்தது. 20 ஓவர்கள் வரை முழுமையாக சென்றிருந்தால் ஆட்டம் மேலும் நெருக்கமாக இருந்திருக்கும். பணிவுடன் இருப்பதும், எதிரணிக்கு மரியாதை கொடுப்பதும் முக்கியம். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் பெரிய ஹிட்டர்கள் உள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் தங்களது அற்புதமான பேட்டிங்கால் சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தனர். நாம் அதிக ரன்கள் எடுத்துள்ளோம், ஆனால் நாம் பணிவுடன் இருக்க வேண்டும் என சக அணி வீரர்களிடம் கூறினேன்.
ஆந்த்ரே ரஸ்ஸலுக்கு எதிராக ஜடேஜாவைப் பயன்படுத்துவதே விருப்பமாக இருந்தது. ஏனெனில் பந்து ஆடுகளத்தில் நின்றும், சுழன்றும் வந்தது. ரஸ்ஸலை போல்டாக்குவதற்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை” என்றார்.